‘அப்படியெல்லாம் மனசு புண்படக் கூடாது’
கருத்துச் சுதந்திரம் நம் காலத்திலும் எட்டாக் கனி தான். படிநிலை சமூகமான இச்சமூகத்தில் எதைச் சொல்ல வேண்டும் , எழுத வேண்டும் என்ற எழுதப்படா கட்டுப்பாடுகள் ஏராளம். என்ன சொல்லப்பட்டது என்பதைத் தாண்டி யார் அதைச் சொன்னார் ? அவருடைய பின்புலம் என்ன ? தாங்கி நிற்கும் நம்பிக்கை எது ? எனத் தோண்டித் தோண்டி உயிரோடு புதைக்கப்பட்ட சிந்தனையாளர்கள் இங்கு ஏராளம். அவதூறுகளுக்கும் , அரைஉண்மைகளுக்கும் அதிகாரத்திடமிருந்து கிடைக்கும் அரவணைப்பு சிந்தனையாளர்களுக்கு பெரும்பாலும் வேறுவிதமாகவே வெளிப்படுகிறது. எழுத்தாளர் பெருமாள் முருகனை பற்றி அவருடைய புதினம் மாதொருபாகன் சர்ச்சைக்குள்ளான போது தான் அறிய நேரிட்டது. அப்படி என்னதான் அவர் எழுதியிருக்கிறார் என அறிந்துகொள்ள எப்படியோ அதை வாங்கினேன் , படித்தேன். நல்லதொரு புதினம் என்பதைத் தாண்டி என்னை ஒன்றும் அது புரட்சியில் ஈடுபட செய்யவில்லை. பல நேரங்களில் புறந்தள்ளப்படுவதும் ஒருவகையில் நல்லது தான். நம்மைப் பற்றி அறியாதவர்கள் கூட அறிவதற்கான நல்வாய்ப்பு! பிறகென்ன பெருமாள் முருகனின் ஒவ்வொரு படைப்பையும் தீவிரமாக வாசித்திருக்கிறேன். அதில் பூக்குளியும் , பூனாட்சியும...