வைக்கம் முகம்மது பஷீரின் பால்யகால சகி
எழுத்துகளில் தான் எத்தனை உணர்வுகள். கடந்து வந்த பாதை யாருக்கும் அவ்வளவு மென்மையாக இருந்துவிடவில்லை என்பது தான் எதார்த்தம். நினைவுகளின் அசைவுகளில் தான் வாழ்க்கை பல தருணங்களில் இனிக்கவும் கசக்கவும் செய்கிறது. நினைவுகளின் அன்புக்குரியவர்களோ நாம் சிறிதும் வாழ்க்கையில் எதிர்பார்த்திராதவர்கள். ஏன், நம்மால் துவக்கத்தில் புரிந்துகொள்ளப்படாதவர்களாகவுமே இருக்க செய்கிறார்கள். மஜீதும், சுகாறாவும் வாசகனின் கண்களை குளமாக்கும் கதாபாத்திரங்கள். பால்ய காலத்தின் நட்புக்கு ஈடேது! “நாம வளந்திருக்கவே கூடாது. வளர்ந்துவிட்டதால்தானா சோகங்களும் ஆசைகளும் உருவாயின”? என்ற சுகாறாவின் வார்த்தைகளில் எவ்வளவு அர்த்தம். “மனிதர்கள் எல்லா இடங்களிலுமே ஒரேபோல்தான் மொழியிலும் உடையிலும் மட்டும்தான் வேறுபாடு. எல்லாருமே, ஆண் பெண்... பிறந்து, வளர்ந்து, இணைசேர்ந்து உற்பத்தியைப் பெருக்கி... பின்பு, மரணம். அவ்வளவுதான்!” என்று தேசாந்திரியான மஜீதின் மனக்குரலில் வெளிப்படுகிறது வாழ்வின் எதார்த்தம். அழகும் அமைதியும் பொதிந்த வாழ்க்கையென்று ஒன்றில்லை. வறுமையின் கொடுமையிலும் நினைவுகள் ஊடாக மகிழ முடியும், மகிழ்விக்க முடியும். வாழ்க்கை சக்கரம் எப்படி சுழலும் யாரை எங்கு நிறுத்துமென இங்கு யாரால் சொல்ல முடியும்? தொடுதிரையில் துயில்கொண்டு தொடுதிரையில் பால்யத்தின் நாட்களை தனிமையில் வெறுமையில் நகர்த்தும் தலைமுறைக்கு பால்யகாலத்தின் நட்பெல்லாம் முப்பது வினாடி படம் பார்ப்பது போன்றதே. “எல்லோரும் தூங்கிவிட்டபிறகு மஜீது சுகறாவிடம் பேசுவான். ஆயிரத்து ஐநூறு மைல் தூரத்திலிருக்கும் சுகாறாவைப் பார்ப்பான். அவள் இருமுவது இங்கே கேட்கும். ஒவ்வொன்றாக சொல்லி சுகாறாவை ஆறுதல் படுத்துவான்.”

Comments