அந்தத் தவிட்டுக்குருவி இறந்து கொண்டிருந்தது - ஆசைத்தம்பி
வளர்ச்சியின் பெயரால் நடத்தப்படும் இயற்கையின் மீதான வன்முறைதான் மோசமான வன்முறை. இதைப்பற்றிய சிந்தனை மேலெழாமலிருக்க இங்கே மதமும், சாதியும் ஆட்சியாளர்களுக்கும், பெரும் நிறுவனங்களுக்கும் தேவைப்படுகிறது. யார் எப்படி மறைத்தால் என்ன சூழலியல் சீர்கேட்டின் பிரதிபலனை இங்கு அனைவரும் அனுபவித்தே ஆக வேண்டும். பாதிப்பின் அளவில் தான் இங்கு பெரியதொரு வித்தியாசம். வளரும் நாடுகளும், ஏழைகளும், அதிகாரமற்றவர்களும் அடையும் இன்னல்களை அதிகாரவர்க்கமும், பெரும்பணக்காரர்களும், வளர்ந்த நாடுகளும் எதிர்கொள்வதில்லை என்பது தான் நிதர்சனம். ஒரு சில புத்தகங்களை படிக்கும் போது மட்டும் மனம் ஏதோ கனத்துப் போகிறது. பரிமாண வளர்ச்சியில் மனித இனம் தோன்றியே இருக்கக்கூடாதோ என்ற எண்ணம் மேலோங்குகிறது. எல்லா மனிதர்களும் மோசமானவர்கள் இல்லையென்றாலும் சூழலியல் சிந்தனை கொண்டவர்கள் அரிதிலும் அரிதே. தே. ஆசைத்தம்பியின் அந்த தவிட்டுக்குரவி இறந்து கொண்டிருந்தது என்ற கட்டுரைத் தொகுப்பை படித்தேன். சுற்றுச்சூழல் பற்றிய 20 கட்டுரைகளும் 7 பறவைகள் பற்றியளவும் இறுதியில் கலைச்சொற்களும் கொண்ட தொகுதி. இயற்கையில் எதுவும் தனித்து இல்லை என்பது தான் ஆசை அவர்களின் எழுத்தின் அடிநாதமாகயிருக்கிறது. மனித நலன் என்றெல்லாம் எதுவுமில்லை. சூழலியலில் ஏற்படும் ஒரு பாதிப்பு அனைத்தையும், மனிதர்கள் அடங்க, பாதிக்கத்தான் செய்யும். தண்ணீர் வணிகமயமானதின் அபத்தத்தை விவரிக்கும் ஆசை ‘சென்னையில் மட்டும் ஒரு நாளைக்கு 10 இலட்சம் தண்ணீர் கேன்கள் விநியோகிப்படுவதாகவும், ஒரு தொழிற்சாலையால் வெளியேற்றப்படும் ஒரு லிட்டர் கழிவுநீரால் மேலும், 5 லிட்டர் நன்னீர் மாசடைகிறது’ என்ற செய்தியையும் பதிவு செய்கிறபோது தண்ணீர் பிரச்சனை வருங்காலங்களில் எவ்வளவு பெரிய பேரிடராக போகிறது என்பதை அனுமானிக்க முடிகிறது.
காடழிப்பும், வெப்பமயமாதலும் உலகை முன்னெப்போதுமில்லா சூழலுக்கு தள்ளியிருக்கிறது. உலகின் நுரையீரல் என வருணிக்கப்படும் அமேசான் காடு ஆண்டொன்றிக்கு 20000 சதுர மைல் அளவை இழக்கிறதென்பது வெறும் செய்தியல்ல மாறாக ஆபத்தின் அறிகுறி. பல்லுயிர்களின் மகத்துவத்தை குறிப்பாக தேனீக்களை பற்றி ஆசை குறிப்பிடும் போது ஆண்டொன்றிக்கு தேனீக்களின் பொருளாதார பங்களிப்பை மதிப்பிட்டால் அவை 20 இலட்சம் கோடியை தாண்டும் என்கிறார். இயற்கையை அதன் மீது மனிதர்கள் தொடுக்கும் போரை மட்டும் குறிப்பிடாமல் மகத்தான மனிதர்களை பற்றியும் கூறுகிறார். சுந்தர்லால் பகுகுணாவின் சிப்கோ இயக்கம், மகாத்மா காந்தியின் சூழலியல் பார்வை மற்றும் தற்சார்பு பொருளாதாரம், ஆண்களே ஆதிக்கம் செலுத்தும் உலகில் யானைகளின் தோழியான டி.என்.சி. வித்யாவின் மகத்தான பங்களிப்பு, இயற்கை வளங்களை பாதுகாக்க முற்பட்டதால் படுகொலை செய்யப்பட்ட பெர்த்தா காசிரீஸின் மெய்சிலிர்க்கும் வாழ்க்கை என மகத்தான மனிதர்களை பற்றியும் ஆசை குறிப்பிடுவது இப்புத்தகத்தின் சிறப்பென்பேன்.
தான் கற்றதை மட்டும் எழுதாமல் கண்டதையும் எழுதியிருக்கிறார் ஆசை. சாலையில் அடிப்பட்டுக் இறந்து கொண்டிருந்த தவிட்டுக்குரவி, கூட்டில் இருந்து விழுந்த குருவிக் குஞ்சு, வளர்ப்பு குருவிகளால் துரத்தப்படும் குயில், தன் வீட்டில் சுற்றித்திரியும் குருவிகள் என ஆசை பறவைகளை பற்றி எழுதும்போது பறவைகள் எத்தனை மகத்தானவை என்ற எண்ணம் மேலெழும்புகிறது. பறவைகளை அதன் நோக்கில் விட்டுவிடுங்கள், உணவும் தர வேண்டாம் என்று கூறுவதிலிருந்து இரக்கம் அறிவோடு இணைந்து செல்ல வேண்டும் என்பதை உணர முடிகிறது. புத்தகத்தின் ஒவ்வொரு பக்கமும் அறிவை பெருக்குவதோடு அறத்தையும் வலியுறுத்துகிறது. மனிதர்களின் வாழ்க்கைமுறையில் ஏற்படும் மாற்றம் சூழலியல் சீர்கேட்டை சரிசெய்வதற்கான முதல்படி, என்கிறார் ஆசை. அழிவின் விளிம்பில் உலகமே இருக்கும்போது மனிதன் மட்டும் தப்பித்துக்கொள்வான் என எண்ணுவது மடமையே. கொஞ்சம் மாறித்தான் பார்ப்போமே!
Comments