‘அப்படியெல்லாம் மனசு புண்படக் கூடாது’
கருத்துச் சுதந்திரம் நம் காலத்திலும் எட்டாக் கனி தான். படிநிலை சமூகமான இச்சமூகத்தில் எதைச் சொல்ல வேண்டும், எழுத வேண்டும் என்ற எழுதப்படா கட்டுப்பாடுகள் ஏராளம். என்ன சொல்லப்பட்டது என்பதைத் தாண்டி யார் அதைச் சொன்னார்? அவருடைய பின்புலம் என்ன? தாங்கி நிற்கும் நம்பிக்கை எது? எனத் தோண்டித் தோண்டி உயிரோடு புதைக்கப்பட்ட சிந்தனையாளர்கள் இங்கு ஏராளம். அவதூறுகளுக்கும், அரைஉண்மைகளுக்கும் அதிகாரத்திடமிருந்து கிடைக்கும் அரவணைப்பு சிந்தனையாளர்களுக்கு பெரும்பாலும் வேறுவிதமாகவே வெளிப்படுகிறது. எழுத்தாளர் பெருமாள் முருகனை பற்றி அவருடைய புதினம் மாதொருபாகன் சர்ச்சைக்குள்ளான போது தான் அறிய நேரிட்டது. அப்படி என்னதான் அவர் எழுதியிருக்கிறார் என அறிந்துகொள்ள எப்படியோ அதை வாங்கினேன், படித்தேன். நல்லதொரு புதினம் என்பதைத் தாண்டி என்னை ஒன்றும் அது புரட்சியில் ஈடுபட செய்யவில்லை. பல நேரங்களில் புறந்தள்ளப்படுவதும் ஒருவகையில் நல்லது தான். நம்மைப் பற்றி அறியாதவர்கள் கூட அறிவதற்கான நல்வாய்ப்பு! பிறகென்ன பெருமாள் முருகனின் ஒவ்வொரு படைப்பையும் தீவிரமாக வாசித்திருக்கிறேன். அதில் பூக்குளியும், பூனாட்சியும் மறக்க இயலா புதினங்கள்.
கதைகளை
படிப்பதிலுள்ள ஆர்வம் கட்டுரைகளையும், ஆய்வு நூல்களையும் படிப்பதில் பெரிதாக வருவதில்லை. எளிதில்
அலுப்புக்குள்ளாகிறது என்பதே தொடக்கத்தில் என்னுடைய எண்ணமும். பின்னாளில் அது
மாறியது அல்லது மாற்றத்திற்கான சூழ்நிலைகள் உருவாகின என்றே சொல்லலாம்.
எழுதுவது அதுவும்
உள்ளத்தின் ஆழத்திலிருந்து பொதுபுத்தியில் புரையோடியிருக்கும் நம்பிக்கைகளை பகடை
செய்வது ஆபத்திற்கு அழைப்பிதழ் கொடுப்பதாகும். எவருடைய மனம் எப்படிப் புண்படுமோ
என்ற பயம் வந்துவிடுகிறது. பல படைப்புகளோடு நாமும் புதைக்கப்படுவோமோ என்ற எண்ணம்
எனக்கு அவ்வப்போது எழுவதுண்டு. “அப்படியெல்லாம் மனசு புண்படக்கூடாது” என்ற
பெரியாரின் வார்த்தைகளைத் தலைப்பாகக் கொண்டு பெருமாள் முருகன் எழுதிய 27 கட்டுரைகளும்
பகடையும், பயமும் நிறைந்தவை
என்றே சொல்வேன். தான் எதிர்கொண்ட சிக்கல்களையும் சமகால எழுத்தாளர்கள் சிலரின்
வேதனைகளையும் அங்கொன்றும் இங்கொன்றுமாக இந்த தொகுப்பிலே தொட்டுச் செல்கிறார்.
“பரிசீலனையற்ற சமூகத்திற்கு எழுதத்தான் வேண்டுமா?” என அவர் எழுப்பும் வினா சமூக மாற்றத்தை
எதர்கொண்டு துவண்டு போகும் ஒவ்வொருவரின் மனக்குமுரலும் கூட. “மூத்தோர் சொல்
அமிழ்தம்” எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள கட்டுரை அபாரம் என்று தான் சொல்ல
வேண்டும்.
வினவுவதை
முளையிலேயே கிள்ளிவிடும் நமது குடும்ப அமைப்பு முறையை அதையொட்டிய கற்பிதங்களை
பெருமாள் முருகன் எழுதியிருப்பதில் நம் அனைவரோடு வாழ்வோடும் ஒருவகையில் ஒப்பிட்டு
பார்க்க முடியும். கருத்து சுதந்திரத்தை நசுக்குவதில் முதலிடம் குடும்பங்களுக்கே
(சில தருணங்களில் நாம் சார்ந்திருக்கும் அமைப்புகளும் அந்த மகத்தான காரியத்தை
செய்ய மறப்பதில்லை!). இதில் ஒரு பெருமிதம் வேறு! கருத்துரிமை அடிப்படை மனித உரிமை
என்ற நிலை வருகிற போது தான் அறிவியல் சார்ந்த சிந்தனையும், அறம் சார்ந்த
செயல்பாடுகளும் சாத்தியம். கிரேக்க ஞானி சாக்ரடீஸ் முதல் நம் காலத்து கௌரி லங்கேஷ்
வரை கருத்துக்களுக்காக பலியாக்கப்பட்டவர்கள் தான். ஆபத்து என்று அறிந்தும் மனம்
ஏனோ பொதுபுத்தி அபத்தம் என கருதுபவற்றை பேச தொடர்ந்து முயன்றுகொண்டு தான்
இருக்கிறது. கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்ளும் காலம் நிச்சயம் பிறக்கும் என்ற
நம்பிக்கை மனதின் ஆழத்தில் குற்றுயிரோடு இருக்கத்தான் செய்கிறது.

Comments